நவீன உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்ட போதிலும், இன்றும் செல்போன், மின்சாரம் என எந்த வசதியும் இன்றி, அடர்ந்த காட்டுக்குள் மரங்களின் உச்சியில் வீடு கட்டி வாழும் ‘கொரோவாய்’ (Korowai) பழங்குடியின மக்கள் உலகையே வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள அடர்ந்த மற்றும் மர்மமான காடுகளில் இந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக வெளி உலகத் தொடர்பே இல்லாமல் இருந்த இவர்கள் பற்றி, கடந்த 1970-களுக்குப் பிறகுதான் உலகம் அறியத் தொடங்கியது. இவர்களது தனித்துவமான வாழ்க்கை முறை ஆய்வாளர்களைப் பிரமிக்க வைத்துள்ளது.

கொரோவாய் மக்களின் மிக முக்கியமான சிறப்பம்சம் அவர்கள் அமைக்கும் “மரம் வீடுகள்” (Tree Houses) ஆகும். இவர்கள் தரையில் வசிக்காமல், தரையிலிருந்து சுமார் 10 மீட்டர் முதல் 50 மீட்டர் உயரம் கொண்ட ராட்சத மரங்களின் உச்சியில் தங்களது வீடுகளை அமைக்கின்றனர். வலுவான மரக்கட்டைகள், இலைகள் மற்றும் இயற்கை பொருட்களைக் கொண்டு கட்டப்படும் இந்த வீடுகள், பலமான காற்று மற்றும் மழையைத் தாங்கும் திறன் கொண்டவை. தூரத்திலிருந்து பார்க்கும்போது, மரங்களின் மேல் ஒரு கிராமமே இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

இவர்கள் மரங்களின் உச்சியில் குடியேறியதற்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணம் உள்ளது. பழங்காலத்தில் அண்டை பழங்குடியினரின் தாக்குதல்கள் மற்றும் கொடிய காட்டு விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே இவர்கள் இந்த உயரமான இடத்தைத் தேர்வு செய்துள்ளனர். மேலும், உயரமான இடத்தில் இருந்து கொண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளைக் கண்காணிப்பது இவர்களுக்கு எளிதாக இருக்கிறது.

இன்றும் கூட, கொரோவாய் பழங்குடியினரில் சில குழுக்கள் வெளி மனிதர்களைச் சந்திக்காமல் தங்களது பாரம்பரிய முறையிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களது உணவு, கலாச்சாரம் மற்றும் சிந்தனை என அனைத்தும் இயற்கையைச் சார்ந்தே உள்ளது. மேலும் நவீன வசதிகள் ஏதுமின்றி, இயற்கையோடு சமரசம் செய்து கொண்டு வாழும் இவர்களது வாழ்க்கை முறை, “மனிதன் இயற்கையோடு இணைந்து எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?” என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.