“விலங்குகள் மனிதர்களை விட மேலான உணர்வுகளைக் கொண்டவை” என்பதை நிரூபிக்கும் வகையில், குடிபோதையில் சாலையில் கிடந்த தனது எஜமானனை நாய் மற்றும் குதிரை ஆகிய இரண்டும் பாதுகாத்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டின் கிராமப்புறப் பகுதி ஒன்றில், நபர் ஒருவர் மது போதையில் தன்னை மறந்து ஒரு மண் சாலையில் விழுந்து கிடந்துள்ளார். அவரது சட்டைப் பையில் மது பாட்டில் இருப்பதும், அவர் சுயநினைவின்றித் தூங்குவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த நபர் ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்தபோது, அவருடன் வந்த வளர்ப்பு நாயும், குதிரையும் அவரை விட்டு நகராமல் அங்கேயே நின்றன. அந்த வழியாக வாகனங்களோ அல்லது மற்றவர்களோ வந்து அவருக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க, ஒரு மெய்க்காப்பாளர் போல அவை பாதுகாப்புக் கொடுத்தன. சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த நபரின் நண்பர்கள் அவரைத் தேடி அங்கு வந்தனர். அவர்கள் கத்தியும், சத்தமிட்டும் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால், அவர் மது போதையில் எழுந்திருக்கவே இல்லை. அவரது நண்பர்கள் அவரைத் தூக்கிச் செல்லும் வரை, அந்த நாயும் குதிரையும் ஒரு அங்குலம் கூட நகரமால் அங்கேயே நின்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
In Brazil, a drunk man fell asleep in the middle of the street. But his horse and dog stayed to protect him until his friends found him.
This is the most valuable wealth a person can possess. pic.twitter.com/qqikzBDa1Y
— The Figen (@TheFigen_) April 5, 2026
சமூக வலைதளமான ‘X’ தளத்தில் @TheFigen_ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது பல லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த இணையதள வாசிகள் பலரும் விலங்குகளின் விசுவாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போயுள்ளனர். “இதுதான் உண்மையான விசுவாசம்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மனிதர்களை விட விலங்குகளிடம் தான் அதிக அன்பு இருக்கிறது என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். “விலங்குகளின் இந்த அன்பு, உலகில் உள்ள மிகப்பெரிய செல்வம்” என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் உறவுகள் கைவிட்டாலும், வளர்ப்புப் பிராணிகள் கடைசி வரை கைவிடாது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
