ஈரானின் வடமேற்குப் பகுதியில் உள்ள செஹராபாத் உப்புச் சுரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித உடல்கள், அவை புதைக்கப்பட்ட அதே நிலையில் சிதையாமல் கண்டெடுக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஈரானின் மஞ்செலோ கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள இந்த உப்புச் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த உடல்கள் ‘சால்ட்மேன்’ (Saltmen) என்று அழைக்கப்படுகின்றன.

இந்த உடல்கள் சுமார் 10,000 ஆண்டுகள் பழமையானவை என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இத்தனை நீண்ட காலத்திற்குப் பிறகும், இந்த உடல்களின் முகம், கைகள், தாடி, தலைமுடி மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் கூட அப்படியே இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.

சுரங்கத்திற்குள் நிலவும் அதிகப்படியான உப்புத்தன்மை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவை இந்த உடல்கள் அழுகிப்போகாமல் தடுத்துள்ளன. உப்பு ஒரு இயற்கை பாதுகாப்புப் பொருளாக செயல்பட்டு, உடல்களைச் சிதைய விடாமல் பாதுகாத்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

கடந்த 1993-ஆம் ஆண்டு சுரங்கத் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, தற்செயலாக முதல் ‘சால்ட்மேன்’ உடல் கண்டறியப்பட்டது. அந்த உடலுடன் ஒரு தங்கக் கடுக்கன், இரும்பு கத்தி மற்றும் தோலினால் ஆன காலணிகள் கண்டெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 2004, 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 6 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் 16 வயது சிறுவனின் உடலும் அடங்கும். இவர்கள் அனைவரும் அந்தச் சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொழிலாளர்களின் மரணம் தற்செயலானதல்ல, சுரங்கம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து என்பதை ஆய்வுகள் உணர்த்துகின்றன. கண்டெடுக்கப்பட்ட உடல்களின் தலை மற்றும் கண்களுக்கு அருகில் எலும்பு முறிவுகள் காணப்படுகின்றன.

ஒரு உடல் தனது கைகளை முகத்திற்கு மேலே தூக்கிய நிலையில் உள்ளது. விபத்தின்போது தன்னைத் தற்காத்துக் கொள்ள அவர் முயன்றதை இது காட்டுகிறது. ஒரு உடலைப் பரிசோதித்ததில், அவரது குடலில் நாடாப்புழு முட்டைகள் இருந்தன. இதன் மூலம் அந்த கால மனிதர்கள் சமைக்காத அல்லது பாதியாகச் சமைக்கப்பட்ட இறைச்சியை உண்டனர் என்பது தெரிய வந்துள்ளது.

பண்டைய கால மனிதர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் ஆடை கலாச்சாரம் குறித்து அறிந்துகொள்ள இந்த ‘சால்ட்மேன்’ கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.