சீன மாஞ்சா நூல் மீண்டும் ஒருமுறை மனித உயிருக்கு உலை வைக்கும் வகையில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு கோரச் சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு நபர், தலைக்கவசம் அணிந்திருந்த போதிலும், காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்தது.
இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தடை செய்யப்பட்ட போதிலும், சீன மாஞ்சா நூல்களின் பயன்பாடு இன்னும் தொடர்வது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை நூல்கள் மிகவும் கூர்மையாகவும், எளிதில் அறுபடாத வலிமையுடனும் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பறவைகளுக்கு எமனாக முடிகிறது.
இந்நிலையில் அரசு மற்றும் காவல்துறை இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து, மாஞ்சா நூல் விற்பனை செய்பவர்களுக்கு மற்றும் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
