அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ள நிலையில், நடுக்கடலில் இயந்திரக் கோளாறு காரணமாகத் தவித்த ஐரிஸ் புஷெர் என்ற ஈரானியப் போர்க்கப்பலையும், அதிலிருந்த 208 வீரர்களையும் இலங்கை கடற்படை மனிதாபிமான அடிப்படையில் மீட்டுள்ளது. இதற்கு முந்தைய நாள், மார்ச் 4, 2026 அன்று, இந்தியாவின் ‘மிலன் 2026’ கடற்படை பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான ஐரிஸ் தேனா, காலிக் கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டொர்பிடோ தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட மாலுமிகள் உயிரிழந்த சூழலில், அதே போன்ற தாக்குதலுக்கு ஐரிஸ் புஷெர் கப்பலும் ஆளாகக்கூடும் என்ற அச்சம் நிலவியது. இதனால் ஏற்பட்ட அவசரச் சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட 208 பணியாளர்களில் 53 அதிகாரிகள், 84 பயிற்சிப் பிரிவினர் மற்றும் இதர மாலுமிகள் அடங்குவர்.
மேலும் இவர்கள் அனைவரும் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டு கொழும்பிலுள்ள கடற்படைத் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்துத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் அனுர குமார திஸாநாயக்க, “நாங்கள் இந்தப் போரில் எந்தப் பக்கமும் சாரவில்லை எங்களின் நடுநிலைமையைப் பேணிக்கொண்டே மனித உயிர்களைக் காக்கும் பணியைச் செய்கிறோம்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, பாதுகாப்புக் காரணங்களுக்காக ஐரிஸ் புஷெர் கப்பல் திருகோணமலைத் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, போர்ப் பதற்றம் பிராந்திய அளவில் பரவும் அபாயத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.
