லண்டனில் பள்ளி மாணவர்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் வலையில் வீழ்த்தி, ஒரு மாணவர் மூலம் கர்ப்பமான கணித ஆசிரியை ரெபெக்கா ஜாய்ன்ஸ்க்கு (31) ஆசிரியர் பணியில் ஈடுபட அந்நாட்டு அரசு ஆயுட்கால தடை விதித்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த இந்த ஆசிரியை, தனது வகுப்பில் படித்த இரு மாணவர்களுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக நெருங்கிப் பழகியுள்ளார். ஒரு மாணவனுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து ஆசை காட்டியதுடன், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, மற்றொரு மாணவருடனும் ‘டேட் நைட்’ என்ற பெயரில் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அவர் கர்ப்பமடைந்து ஒரு குழந்தையும் பிறந்தது.

இந்த விவகாரம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆசிரியை ரெபெக்காவுக்கு ஏற்கனவே நீதிமன்றம் ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்நிலையில், தற்போது ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையம் (TRA) அவரை ஆசிரியர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையத்தின் அதிகாரி கூறுகையில், “மாணவர்களின் நலனை காக்க வேண்டிய ஆசிரியரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது மன்னிக்க முடியாதது. அவர் இனி இங்கிலாந்தில் எந்த பள்ளியிலும், குழந்தைகள் காப்பகத்திலும் பணியாற்ற முடியாது. மீண்டும் பணியில் சேர விண்ணப்பிக்க கூட அவருக்கு உரிமை கிடையாது” என அதிரடியாக தெரிவித்துள்ளார்.