ஒடிசா மாநிலம் கோரா பூத் மாவட்டத்தில் சமலு- ஈது குரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஈது குரு கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இவர்கள் இரண்டு பேரும் ஒரு வேலையாக சென்றபோது ஈது குருவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தொடர் சிகிச்சையில் இருந்த போதும் அவரது உடல்நிலை தேராத காரணத்தினால் ஈது குருவை டிஸ்டார்ஜ் செய்து அங்கிருந்து விஜயநகரத்திற்கு சமலு அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து விஜய நகரத்திற்கு அவர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஈது குரு உடல்நிலை மோசமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிப் போன ஆட்டோ டிரைவர் அவர்கள் இரண்டு பேரையும் அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸில் மனைவியை கொண்டு செல்வதற்காக சமலு அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் தெலுங்கு தெரியாத காரணத்தினால் அவர் திகைத்துப் போய் நின்றுள்ளர். இந்நிலையில் சமலு  தனது மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு நெடுஞ்சாலையில் நடக்க தொடங்கியுள்ளார்.

அப்போது பெண்ணை தோளில் தூக்கிக் கொண்டு ஆண் செல்வதை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்த போது நடந்த விபரங்கள் அனைத்தையும் சமலு  கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் சமலுவுக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் உணவு வழங்கி ஒடிசா செல்வதற்காக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.