கேரளாவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டிருந்ததால் பஞ்சு மிட்டாய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரளாவில் பஞ்சு மிட்டாய் அமோகமாக விற்பனையாகி வருகின்றது. இதனை வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் கொல்லம் பகுதியில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் கேரள உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

பஞ்சு மிட்டாயில் நிறம் சேர்க்க ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்திருப்பது இந்த சோதனையில் தெரியவந்தது. இந்த வகை ரசாயனம் ஜவுளி ஆலைகளில் பயன்படுத்தும் ரசாயனம் என்பது தெரியவந்தது. இந்த வகை ரசாயனம் சாப்பிட்டால் உடலில் கல்லீரல் பாதிப்பு அல்லது புற்றுநோய் ஏற்படும் என்பதால் பஞ்சுமிட்டாய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு தயாரிக்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களை பறிமுதல் செய்து உணவு தர கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.