ஜார்க்கண்ட் மாநிலம் கட்வா மாவட்டத்தில், மூடநம்பிக்கை காரணமாக 3 வயதுக் குழந்தை ஒன்று கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்டிஹா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு நபரின் தாய், சில ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட கால நோயால் இறந்துள்ளார். தனது தாயின் மரணத்திற்குப் பக்கத்து வீட்டுக்காரர் செய்த ‘மந்திர தந்திரங்கள்’ (Tantra Vidya) தான் காரணம் என்று அவரது மகன் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது தாயின் மரணத்திற்குப் பழிவாங்க அந்த நபரின் 3 வயது மகனைக் கடத்தியுள்ளார்.
கடத்தப்பட்ட சிறுவனுக்கு உணவில் ‘சல்பஸ்’ (Sulfas) எனப்படும் நச்சு மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கொலையை மறைக்கச் சிறுவனின் சடலத்தை முதலில் வீட்டிலேயே ஒளித்து வைத்துவிட்டு, பின்னர் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் ஒரு வயல்வெளியில் வீசிச் சென்றுள்ளனர். கிராம மக்களின் புகாரைத் தொடர்ந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், நேராகக் குற்றவாளியின் வீட்டிற்குச் சென்றதையடுத்து உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் வார்டு கவுன்சிலர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மீதமிருந்த விஷ மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
