சென்னை உயர் நீதிமன்றம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பாதுகாப்புத் தொடர்பான வழக்கை விசாரித்த போது மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து பின் அந்த மது பாட்டில்களை திரும்ப பெறும்போது அந்த 10 ரூபாயை மீண்டும் அவர்களுக்கு கொடுக்கலாம் என யோசனை தெரிவித்தது. அதன் பிறகு இந்த திட்டங்களை டாப் சிலிப், மேகமலை, கொல்லிமலை, சிறுமலை, ஏலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற பகுதிகளிலும் தேசிய சரணாலயங்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற இடங்களில் அமல்படுத்தலாம் என்று உத்தரவிட்டது. அதோடு கோவை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இரு மாதங்களுக்கு திட்டத்தை செயல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது  காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தியதாக கூறி தமிழக அரசை உயர் நீதிமன்றம் வெகுவாக‌ பாராட்டியது. அதன்பிறகு ஏப்ரல் 1-ம் தேதி முதல் கோவை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு விற்பனை செய்யப்பட்ட அனைத்து மது பாட்டில்களும் திரும்ப பெறப்பட்டதா என்பதை உறுதி செய்வதற்கு மது பாட்டில்களில் க்யூஆர் கோடு முறையை அறிமுகப்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். மேலும் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தின் மூலம் ஈட்டிய வருவாய் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.