தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், இந்த பணிகளில் ஈடுபட அரசு சாரா அமைப்புகள் எதுவும் முன்வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதோடு சிறப்பு நிதிகள் எதுவும் ஒதுக்கவில்லை எனவும், பல இடங்களுக்கு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியவில்லை எனவும், பருவ மழை காரணமாக இப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வழக்கை தள்ளி வைத்து கால அவகாசம் கொடுத்தால் வழக்கில் முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் சீமை கருவேல மரங்களை அகற்றுமாறு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் உத்தரவிடலாம் என்று தெரிவித்தனர். மேலும் இறுதி வாய்ப்பாக பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்த நீதிபதிகள் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும், குறிப்பிட்ட தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தமிழக அரசை எச்சரித்தனர்.