தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளியில் 45 வருடங்களாக பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதன் பிறகு எங்களுடைய முரண்பாடுகளை களைய தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருக்கிறோம். அதன்படி பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி சென்னையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.‌

இந்த போராட்டத்திற்கு பிறகாவது தமிழக அரசு 45 வருடங்களாக மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதன் பிறகு மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். அரசு பள்ளிகளில் வழங்கப்படும் அத்தனை விதமான சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வழங்கப்பட வேண்டும். மே மாதத்தில் பொது கலந்தாய்வு நடத்தப்பட்டு அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படுவதோடு, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது அனைத்து ஆசிரியர்களுடனும் பள்ளிகள் முறையாக செயல்பட வேண்டும்.

மேலும் மேல்நிலை ஆசிரியர் பணியிடங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதிய விகிதம் இருப்பதால் மேல்நிலை ஆசிரியராக பணிபுரிபவர்களின் காலத்தை கணக்கில் கொண்டு அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் அமைச்சு மற்றும் அடிப்படை பணியாளர்களின் நியமிப்பதோடு தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குள் அனைத்து விதமான பண பலன்களையும் வழங்கி விட வேண்டும் உள்ளிட்ட 7 விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.