
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தற்போது சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தொகுதி மறு வரையறை கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட ஏழு மாநிலங்களில் இருந்து நிர்வாகிகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசும்போது இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும். ஜனநாயகத்தை காப்பதற்காக நாம் அனைவரும் ஒரு அணியில் திரண்டுள்ளோம். இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. தொகுதி மறு சீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறோம். இது எண்ணிக்கை பற்றியது கிடையாது அதிகாரம் பற்றியது. மக்கள் தொகை அடிப்படையில் ஆன தொகுதி மறு சீரமைப்பு என்பது தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும்.
மணிப்பூர் கடந்த இரண்டு வருடங்களாக பற்றி எரிகிறது. நீதிக்கான அவர்களுடைய குரல்கள் புறக்கணிக்கப்படுகிறது. ஏனெனில் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பது நம்முடைய அரசியல் வலிமை குறைவதற்கு சமம். இது நம்முடைய மாநிலத்தின் உரிமைகள் மற்றும் எதிர்கால நலனை பற்றியது. எனவே தொகுதி மறு சீரமைப்பு என்பது கண்டிப்பாக நடக்க கூடாது என்று கூறினார். மேலும் இது தொடர்பாக ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.