கடந்த 7ஆம் தேதி இஸ்ரேலின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுக்க தொடங்கிய நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கும் ஈரான் ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக செயல்பட தொடங்கியது. இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்ஜி ஹாலேவி செய்தி ஒன்றை படையில் உள்ள சக வீரர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த செய்தி குறிப்பில் அவர் கூறியிருந்ததாவது “ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதல் ஒரு கொலைகார திடீர் தாக்குதல் ஆகும். நாம் தொடர்ந்து எதிரிகளை தரை, வான் மற்றும் கடல் வழியாக தாக்கி வருகிறோம். இஸ்ரேலின் இறையாண்மையை திறமற்று  போக செய்ய முயற்சிக்கின்றனர்.

நம் நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க எடுத்த உறுதி மொழியை காத்து வருகிறோம். எதிரிகளின் கட்டமைப்பு தலைமை மற்றும் திறன்களை நாம் அழித்துள்ளோம். குறிப்பிடும்படியான பாதிப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் இஸ்ரேல் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நானும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ஒற்றுமை மற்றும் சக்தி நிச்சயம் வெற்றி பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.