உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பூர்ணகிரி கோவிலுக்கு சிலர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி தனியார் பேருந்தில் 59 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்தப் பேருந்து நேற்று முன்தினம் இரவு ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில் பக்தர்கள் சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த சிலர் கீழே இறங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

சில பக்தர்கள் பேருந்தில் இருந்தனர். அப்போது கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் 3 குழந்தைகள், 6 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 9 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை வலை வீசி தேடி வருகிறார்கள்.