இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி என்பது அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் பலவிதமான நன்மைகள் ஏற்பட்டாலும் மோசடிகளும் அரங்கேரி தான் வருகிறது. அந்த வகையில் ஒருவருடைய பான் கார்டை பயன்படுத்தியும் மோசடிகள் அரங்கேறுகிறது. எனவே நம்முடைய பான் கார்டை பயன்படுத்தி வேறு யாராவது வங்கிக் கணக்கில் கடன் வாங்கினரா என்பதை தெரிந்து வைத்திருப்பது நல்லது. இதை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தற்போது பார்க்கலாம்.

அதற்கு முதலில் உங்களுடைய சிபில் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட் போன்றவற்றை  பயன்படுத்தி உங்கள் பான் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்தி கடன் வாங்கியுள்ளனரா என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் கிரெடிட் ஸ்கோர் தவிர கிரெடிட் அறிக்கையில் உங்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களும் இருக்கும். இதன் மூலம் உங்கள் பான் கார்டை பயன்படுத்தி உங்கள் பெயரில் வேறு யாரேனும் கடன் வாங்கியுள்ளனரா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு சிபில் ஸ்கோரில் இருந்தும் பான் கார்டு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முதலில் cibil.com என்ற முகவரிக்குள் சென்று சிபில் ஸ்கோர் & ரிப்போர்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து get started now என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு திறக்கும் பக்கத்தில் உங்களுடைய பெயர், பான் கார்டு நம்பர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி நம்பர் போன்ற தகவல்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகு உங்களுடைய செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை அதில் உள்ளிட வேண்டும். அதன் பிறகு வரும் சில நடைமுறைகளை நிரப்பிய பிறகு சிபில் ஸ்கோர் மற்றும் கிரெடிட் அறிக்கை தோன்றும். அதில் உங்களுடைய கடன்கள் பற்றிய விவரம் இருக்கும். இதில் நீங்கள் வாங்கிய கடன்கள் தவிர வேறு ஏதேனும் இருந்தால் அது பற்றி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் தெரிவிக்க வேண்டும். மேலும் வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கலாம்.