தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இன்று நடைபெறவிருந்த தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரசாரத்திற்காக நான்கு மணி நேரம் அனுமதி கோரப்பட்ட நிலையில், காவல்துறை தரப்பில் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மிகக் குறுகிய கால அவகாசத்தில் மக்களைச் சந்திப்பது சாத்தியமில்லை என்பதால், இன்றைய பயணத்தைத் தவெக தலைமை ரத்து செய்துள்ளது.

​ஏற்கனவே நேற்று தி.நகர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் பிரசார பயணங்களும் காவல்துறையின் நேரக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணங்களால் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னையில் விஜய்யின் பிரசாரப் பயணங்கள் தொடர்ந்து தடைபட்டு வருவது தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் கலக்கத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஆளுங்கட்சியின் தூண்டுதலால் தான் காவல்துறை இவ்வாறு முட்டுக்கட்டை போடுவதாக தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.