ஹரியானாவின் குருகிராமில், ராஜேந்திர பார்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி பிளாக்கில் வசித்து வரும் கேதன் என்ற நபர், தனது மனைவி ஜோதி(38)யை வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறின் போது பைஜாமா கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். சம்பவத்தின் போது, ஜோதி தனது மகளை அடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட கேதன் தலையிட்டபோது, ஜோதி அவரை அறைந்துள்ளார். கோபமடைந்த கேதன் முதலில் மனைவியின் முகத்தில் பலமுறை குத்தியுள்ளார். பின்னர் பைஜாமாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, கேதன் நேராக அருகிலுள்ள ஆனந்த் கார்டன் காவல் நிலையத்திற்குச் சென்று தானாகவே சரணடைந்தார். போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். கேதனும் ஜோதியும் காதல் திருமணம் செய்தவர்களாகும். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கேதன் நொய்டா விமான நிலையத்தின் சரக்குப் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

அக்கம்பக்கத்தினர் கூறுகையில், இந்த குடும்பத்தில் தினமும் சண்டை சச்சரவுகள் இருந்ததாகவும், கேதனும் அவரது குடும்பத்தாரும் அதிகமாகஅக்கம் பக்கத்தினருடன் சேராமல் வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடந்த சண்டைகளால் கேதனின் தந்தை இருவரையும் பிரித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜேந்திர பார்க் காவல்துறையினர் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.