உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில், பெற்ற மகனையே பெற்றோர் கூலிப்படை ஏவிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துஷ்யந்த் என்ற அந்த இளைஞன் தீராத போதை பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மகனின் போதை வெறியால் ஏற்பட்ட வன்முறை மற்றும் சித்திரவதையைத் தாங்க முடியாமல், அவனை ‘முடிக்க’ அவனது தந்தை முடிவெடுத்தார். இதற்காக ‘ஜாலி’ என்ற கூலிப்படை கும்பலை 5 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கொலைக்கான அட்வான்ஸ் தொகையைத் திரட்ட, அந்த இளைஞனின் தாயே தனது தங்க நகைகளை அடமானம் வைத்ததுதான் இதில் உச்சகட்ட சோகம். முன்பணமாக 55 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில், ஜாலி என்பவன் துஷ்யந்த்தை ஒரு கால்வாய் அருகே வைத்து படுகொலை செய்துள்ளான். ஆரம்பத்தில் மர்ம மரணம் என்று கருதப்பட்ட நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் பெற்றோரே குற்றவாளிகள் என்பது உறுதியானது. தற்போது தந்தை மற்றும் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கூலிப்படை கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
