உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில், முதியவர் ஒருவர் தனது உடல்நிலை சரியில்லாத மனைவியைத் தள்ளுவண்டியில் வைத்து வெளியே அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்தும் தனது மனைவிக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் அந்த முதியவர் குற்றம் சாட்டியுள்ளார். “இங்கே சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுவதை விட, என் மனைவி வீட்டிலேயே உயிர் விடுவது மேல்” என்று அவர் ஆவேசமாகக் கூறிய வார்த்தைகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

​மருத்துவமனையில் உரிய வசதிகள் கிடைக்காத விரக்தியில், அவசர உதவிக்குக் கூட வாகனம் கிடைக்காததால் ஒரு தள்ளுவண்டியை வரவழைத்து, அதில் தனது மனைவியைப் படுக்க வைத்து அவர் அழைத்துச் சென்றுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பெண் ஏற்கனவே சிகிச்சையில் இருந்ததாகவும், நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைத்ததாகவும், அதனால் கோபமடைந்த முதியவர் யாரிடமும் சொல்லாமல் அழைத்துச் சென்றதாகவும் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், ஒரு முதியவர் தனது மனைவியைத் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் செல்லும் காட்சி, அரசு மருத்துவக் கட்டமைப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.