பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவரை மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்லோஹியர் கிராமத்தைச் சேர்ந்த அஜய் படேல் (25) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இவர்களது தனிப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், அந்தப் பெண்ணின் கணவன் அஸ்லம் ஆத்திரமடைந்துள்ளார். ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய அஸ்லமுக்கு பயந்து, அஜய் லூதியானாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
சமீபத்தில் ஊர் திரும்பிய அஜயை, கடந்த 8-ஆம் தேதி இரவு அவரது காதலி போன் செய்து ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு மறைந்திருந்த பெண்ணின் கணவன் மற்றும் அவனது கூட்டாளிகள் அஜயை பிடித்து மரண அடி கொடுத்துள்ளனர். கொலையாளிகள் அஜய்யின் கண்களைத் தோண்டி எடுத்ததோடு, கூர்மையான ஆயுதத்தால் அவரது மர்ம உறுப்பை சிதைத்து சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். பின்னர், இதனை தற்கொலை என திசைதிருப்ப உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மோப்ப நாய், நேராக குற்றவாளியின் வீட்டிற்குச் சென்று நின்றதையடுத்து உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தலைமறைவாக உள்ள அஸ்லமை போலீசார் தேடி வரும் நிலையில், அவரது மனைவி தபுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
