பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ அனந்த் சிங், மருத்துவமனை வளாகத்திற்குள் விதிகளை மீறி புகைபிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சிறை தண்டனை பெற்று வரும் அனந்த் சிங், அண்மையில் மருத்துவப் பரிசோதனைக்காக பாட்னாவில் உள்ள புகழ்பெற்ற இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (IGIMS) அழைத்து வரப்பட்டார். அப்போது, மருத்துவமனை அறைக்குள் அவர் அமர்ந்து கொண்டு எவ்வித அச்சமுமின்றி புகைபிடிக்கும் காட்சிகள் வீடியோவாகப் பதிவாகியுள்ளது.

பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மக்கள் பிரதிநிதியே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இது காட்டுகிறது” என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

சிறை கைதியாக அழைத்து வரப்பட்ட ஒருவர், காவல்துறை பாதுகாப்பில் இருக்கும்போதே இவ்வாறு செயல்பட்டது எப்படி? எனப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அல்லது காவல்துறை தரப்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.