உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், இரண்டு இளைஞர்களின் பைகளில் காவல்துறையினரே கத்திகளைத் திணித்து, அவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அக்ராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் திட்டமிட்டு ஒரு “நாடகத்தை” அரங்கேற்றியுள்ளனர். அந்த இளைஞர்களிடம் முதலில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த காவல்துறையினர், திடீரெனத் தங்களிடமிருந்த கத்திகளை அந்த இளைஞர்களின் பாக்கெட்டுகளில் திணித்துவிட்டு, பின்னர் சோதனையிடுவது போலப் படம்பிடித்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.

​இந்த “திரைக்குப் பின்னால்” நடந்த தில்லுமுல்லு காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் ரகசியமாகப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட, அது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உடனடி விசாரணை நடத்திய அலிகார் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (SSP), சம்பந்தப்பட்ட நான்கு காவலர்களையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த இளைஞர்கள் மீதான பொய் வழக்குகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே, கைது எண்ணிக்கையை உயர்த்த இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.