கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்கப் பிரிவு டி.ஜி.பி. ராமசந்திர ராவ், பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தங்கம் கடத்தல் புகாரில் சிக்கியிருந்த இவருக்கு, இந்த புதிய விவகாரம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் 1993-ஆம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரியான ராமசந்திர ராவ் (59), தற்போது குடிமை உரிமைகள் அமலாக்கப் பிரிவு டி.ஜி.பி-யாக உள்ளார். இவரது வளர்ப்பு மகளும் நடிகையுமான ரன்யா ராவ், துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மகளின் கடத்தலுக்குத் தனது அரசு வாகனத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாக ராமசந்திர ராவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடந்த 2025-இல் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இந்தச் சூழலில், ராமசந்திர ராவ் தனது அலுவலகத்திலேயே சீருடையுடன் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் மூன்று ஆபாச வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் இரண்டு வீடியோக்களில் அவர் போலீஸ் சீருடையிலும், ஒன்றில் சாதாரண உடையிலும் உள்ளார். அந்தப் பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 வீடியோ விவகாரம் குறித்து விளக்கமளிக்க பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டுக்கு ராமசந்திர ராவ் சென்றார். ஆனால், உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி அமைச்சர் அவரைச் சந்திக்க அனுமதி மறுத்துவிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய ராமசந்திர ராவ் முதலில், “இந்த வீடியோக்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஐ.ஜி-யாக இருந்தபோது எடுக்கப்பட்டவை” என்றார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே தனது கருத்தை மாற்றிப் பேசிய அவர், “இந்த வீடியோக்கள் போலியானவை; யாரோ சதி செய்து வெளியிட்டுள்ளனர். இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என பல்டி அடித்தார். அவரது இந்த முரண்பட்ட பேச்சு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வருகிற மே மாதத்துடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனீசுக்கு அளித்துள்ள புகாரில், ராமசந்திர ராவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு அவரைப் பணியிடை நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.