காதலித்த பெண்ணின் குடும்பத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட வாலிபர் ஒருவர், மூன்று நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டதோடு, வலுக்கட்டாயமாகச் சிறுநீரைக் குடிக்க வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனுவும், ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சுமார் 15 நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறி போபாலுக்குச் சென்று சோனுவுடன் வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர், போபாலுக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணைப் பலவந்தமாகத் தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

இதை தொடர்ந்து, காதலன் சோனுவைப் பழிவாங்கத் திட்டமிட்ட பெண்ணின் குடும்பத்தினர், அந்தப் பெண்ணைக் கொண்டே சோனுவைத் தொலைபேசியில் அழைக்கச் செய்துள்ளனர். காதலியின் அழைப்பை நம்பி ராஜஸ்தான் சென்ற சோனுவை, பெண்ணின் உறவினர்கள் கடத்திச் சென்று ரகசிய இடத்தில் அடைத்து வைத்தனர்.

மூன்று நாட்களாக சோனுவைத் தடியால் அடித்துக் கொடூரமாகத் தாக்கியதோடு, ஒரு பாட்டிலில் சிறுநீரை நிரப்பி அவரை வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்றச் செயலை வீடியோவாகப் பதிவு செய்த அவர்கள், அதனைச் சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து மிரட்டியுள்ளனர்.

வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோனுவின் பெற்றோர், போபால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடமான ராஜஸ்தானுக்கு விரைந்த போலீஸார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் ஆணவக் கொலைகளுக்கு இணையாகக் காதலன் மீது நடத்தப்பட்ட இந்தச் சித்ரவதை வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.