
தெலுங்கானாவில் பிரபல கொள்ளையரான பத்துலா பிரபாகர் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபோலி என்ற இடத்தில் உள்ள பப்பில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த ரவுடியை மடக்கி பிடிக்க காவல்துறையினர் ரகசியமாக அந்த பப்புக்கு சென்றனர். அப்போது அந்த ரவுடியை பிடிக்க முயன்ற போது, அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவல்துறையினரை நோக்கி சுட்டார். இதில் கான்ஸ்டபிள் மற்றும் பப் பவுன்சர் இருவரும் பலத்த காயமடைந்தனர். அதன் பின் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் காவல்துறையினர் பிரபல ரவுடி பிரபாகரனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இவர் தெலுங்கானா மற்றும் ஆந்திரா முழுவதும் 100க்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் கொல்லை வழக்குகளில் தேடப்பட்டு வந்துள்ளார். கடந்த 2020ல் விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் கடந்த 2022-ல் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு செல்லும் போது காவல்துறையினரிடம் இருந்து தப்பினார். அன்றிலிருந்து அவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.