மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடித் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததுடன், ஈரானின் முக்கியத் தலைவர்களும் கொல்லப்பட்ட நிலையில் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.
மேலும் போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தச் சூழலில், அங்குள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, தடையற்ற வர்த்தகம் மற்றும் எரிசக்தி போக்குவரத்து ஆகியவையே இந்தியாவின் முக்கிய முன்னுரிமைகள் என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் வன்முறையைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுகள் மூலம் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார். மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர்ச் சூழல் உலகளாவிய ரீதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோதல்களைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
