மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா தனது குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற சில நாட்களுக்குத் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு (Ceasefire) மத்தியஸ்தம் செய்யத் தீவிரமாக முயன்று வருகிறது.
ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வரும் சுமார் 200 ரஷ்யத் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்பதே இந்தத் திடீர் போர் நிறுத்தக் கோரிக்கையின் முக்கியக் காரணமாகும்.
ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான ‘ரோசாட்டம்’ அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸி லிஹாசெவ், தங்கள் பணியாளர்கள் வெளியேறும் பாதைகள் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குத் தெரிவிக்கப்படும் என்றும், அந்த நேரத்தில் தாக்குதல்களைக் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஈரானைக் ‘கற்காலத்திற்குத் தள்ளுவோம்’ என எச்சரித்து, ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகி வரும் வேளையில், ரஷ்யாவின் இந்த அவசர வெளியேற்ற நடவடிக்கை உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்த இறுதிக்கட்ட வெளியேற்றப் பணிக்குப் பிறகு, ஈரான் மீது அமெரிக்கா மிகக் கொடூரமான தாக்குதலைத் தொடுக்கக்கூடும் எனப் போர் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புஷேர் அணு உலையில் கூடுதல் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனது எஞ்சிய ஊழியர்களையும் மீட்க ரஷ்யா அனைத்து ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்தி வருவதால், இன்னும் சில தினங்களில் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
