சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் சிகரெட் பிடிக்கத் தடை விதித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், தனது நண்பரின் இருசக்கர வாகனத்திற்கே தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராய்ப்பூரின் பிர்கான் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு, கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி இரவு 7 மணியளவில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வந்தனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் சிகரெட் பற்றவைக்க முயன்றுள்ளார்.
அபாயகரமான பகுதியில் சிகரெட் பிடிக்க வேண்டாம் என அவரது நண்பர் எச்சரித்ததால், மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் ஆத்திரமடைந்துள்ளார். உடனே தனது கையில் இருந்த லைட்டரால், பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் டேங்க் மீதே தீ வைத்துள்ளார்.
நொடிப்பொழுதில் மோட்டார் சைக்கிளில் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர்கள் இருவரும் வண்டியை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியோடினர். அப்போது பெட்ரோல் பங்க்கில் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்ததால் பெரும் பதற்றம் நிலவியது.
📍Raipur, Chhattisgarh: After being stopped from smoking near a petrol pump, a man set his friend’s bike on fire during refuelling, triggering a major blaze at the station. Alert staff quickly controlled the fire, preventing a big disaster. Two accused arrested; entire incident… pic.twitter.com/1ApAjiEXiH
— Deadly Kalesh (@Deadlykalesh) February 19, 2026
நிலைமையை உணர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், உடனடியாக அங்கிருந்த தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தித் தீயை அணைத்தனர். ஊழியர்களின் இந்த துரித நடவடிக்கையால் பெரும் வெடிப்புச் சம்பவம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீஸார், தலைமறைவாக இருந்த அந்த இரண்டு இளைஞர்களையும் நேற்று (பிப். 19) கைது செய்தனர். மேலும் இது குறித்த வீடியோ வைரலாகின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
