தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், 15 வயது சிறுமி ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டப்பட்டு, மது அருந்தக் கட்டாயப்படுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. நர்சிங்கி பகுதியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவியான இவருக்கு, சார்மினார் பகுதியில் வியாபாரம் செய்து வந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி, அந்தச் சிறுவன் மாணவியை ஒரு வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த பிரபல ரவுடி இம்ரான் கான் மற்றும் மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து, மாணவியை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து, கத்தியைக் காட்டி மிரட்டி மூவரும் மாறி மாறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பள்ளிக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மாணவி இருந்த இடத்தைக் கண்டறிந்த போலீசார், அவரை மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரான இம்ரான் கான் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இம்ரான் கான் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
