தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பறக்கும் படையினரின் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் அவசர மருத்துவச் சிகிச்சைகளுக்காகப் பணம் கொண்டு செல்லும்போது ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கத் தேர்தல் ஆணையம் ஒரு மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது.

இது குறித்துத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், “மருத்துவச் செலவிற்காக 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ரொக்கப்பணம் கொண்டு செல்பவர்கள், மருத்துவமனையில் இருந்து வந்த வாட்ஸ்அப் (WhatsApp) மெசேஜ் அல்லது இ-மெயில் (E-mail) போன்றவற்றை ஆதாரமாகக் காட்டினாலே போதுமானது,” என்று தெரிவித்துள்ளார்.

முன்பெல்லாம் மருத்துவமனை ரசீது அல்லது கடிதத்தின் அசல் நகலை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால், தற்போதைய டிஜிட்டல் காலத்தில் நோயாளிகளின் உறவினர்கள் படும் அவதியைக் கருத்தில் கொண்டு, செல்போனில் இருக்கும் டிஜிட்டல் ஆதாரங்களே போதுமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும், இந்த வசதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், முறையான காரணமின்றி அதிக பணம் கொண்டு சென்றால் அது பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, அவசரத் தேவைக்காக மருத்துவமனைக்கு ஓடும் சாமானிய மக்களுக்குப் மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளதால் சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.