தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கான செய்முறை தேர்வுகளை இந்த மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அரசு பொது தேர்வுகளை முழு பொறுப்புடன் நடத்த வேண்டும். கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் வைக்கப்படும் முறைகளில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்த வேண்டும்.

தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்க கூடாது. 8 கிலோமீட்டர் தொலைவிற்கு மிகாமல் உள்ள பிற அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களை அரசு பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் ஆசிரியர்களை எந்த தேர்வு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்க கூடாது. அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களே துறை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.