தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மற்றும் பொங்கல் பரிசுத் தொகை குறித்த முக்கியமான தகவல்களைக் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி வெளியிட்டுள்ளார். அமைச்சர் காந்தி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏழை மக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலைகளின் உற்பத்தி இலக்கு முழுமையாக எட்டப்பட்டு விட்டதாகக் கூறினார்.
திட்டமிட்டபடி இவை அனைத்தும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் வேட்டி, சேலைகள் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையே, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 ரொக்கப்பணம் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தொடக்கத்தில் ரூ. 5,000 வழங்க ஆலோசிக்கப்பட்டாலும், நிதி நிலையைத் தாங்கி ரூ. 3,000 வழங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடுத்தடுத்து ‘ஜாக்பாட்’ அறிவிப்புகள் வெளியாகக் காத்திருக்கின்றன.
