மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டத்தில் சமூக வலைதள காதலால் ஏற்பட்ட ஒரு பயங்கர கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வீரரூ என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் நரசிங்கப்பூரைச் சேர்ந்த ரீனா என்ற திருமணமான பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களது நெருக்கம் காதலாக மாறவே, வீரரூ அடிக்கடி ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசம் வந்து ரீனாவைச் சந்தித்துள்ளார்.
ஆனால், ரீனாவின் முன்னாள் காதலனான அருண் படேல் என்பவருக்கு இந்தத் தொடர்பு பிடிக்கவில்லை. இதையடுத்து, ரீனாவைத் தன்வசப்படுத்த நினைத்த அருண், அவரோடு சேர்ந்து வீரரூவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதி, ஆசை வார்த்தை கூறி வீரரூவை ரீனா தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். காதலியைச் சந்திக்க 900 கிலோமீட்டர் பயணம் செய்து வந்த அந்த இளைஞரை, ரீனா மற்றும் அருண் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது.
பின்னர் ரத்தக் கறைகளைச் சுத்தம் செய்துவிட்டு, உடலை ஒரு மூட்டையில் கட்டி 200 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பாலத்தின் கீழே 40 அடி பள்ளத்தில் வீசியுள்ளனர்.
அங்கிருந்து தப்பித்து மும்பை, உஜ்ஜைன் எனப் பல நகரங்களுக்குச் சென்று தலைமறைவாக இருந்த இவர்களை, செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மோகத்தால் ஒரு இளைஞரின் உயிர் பறிபோன இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
