போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ என்பவரும் தானும் வேறு வேறு நபர் என்றும், தன் மீது பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினரும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸின் சகோதரருமான ஜான் பிரிட்டோ அதிரடி விளக்கமளித்துள்ளார். கேரளாவில் தன் மீது ஒரே ஒரு லாட்டரி வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும், அதைச் சிலர் திட்டமிட்டுத் திரித்து அவதூறு பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தன் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் நெகட்டிவ் செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
அமைச்சர் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் குடும்பப் பின்னணியைக் கொண்ட தன்னை, போதைப்பொருள் கடத்தல் நபரோடு ஒப்பிட்டுச் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் தீயாய் பரப்பப்பட்டு வருவதாக அவர் தனது பேட்டியில் ஆதங்கப்பட்டுள்ளார். பெயர்ப் பொருத்தத்தை வைத்துக்கொண்டு அரசியல் உள்நோக்கத்துடன் இந்த அவதூறுகள் கிளப்பப்படுவதாகவும், இதற்குப் பின்னால் இருக்கும் நபர்கள் மீது சைபர் கிரைம் போலீஸார் உடனடியாக ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளது தமிழக அரசியல் மற்றும் தவெக வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
