சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் திடீர் விசிட் அடித்து அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்ற அவர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருந்து மாத்திரைகளின் இருப்பு மற்றும் ஒட்டுமொத்த மருத்துவ சேவைகள் குறித்து வார்டு வார்டாகச் சென்று தீவிரமாகப் பார்வையிட்டார். அப்போது மருத்துவமனையில் ஒரு முக்கிய லிப்ட் பழுதடைந்து இயங்காமல் கிடப்பதைக் கண்டு அமைச்சர் கடும் அதிருப்தி அடைந்தார்.
நோயாளிகளும் கர்ப்பிணிகளும் அவதிப்படும் வகையில் லிப்ட் பழுதாகிக் கிடந்தது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அமைச்சர் அருண்ராஜ் ஸ்பாட்டிலேயே கடுகடுத்தார். உடனடியாக இதற்குப் பொறுப்பான பராமரிப்பு நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்ப அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாகச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை பாயும் என அமைச்சர் எச்சரித்துள்ளது அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
