தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து வசதி குறைபாடுகளால் வாக்களிக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குரல் கொடுத்துள்ளார். சென்னையில் இருந்தும் மற்ற நகரங்களில் இருந்தும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க முயன்ற ஆயிரக்கணக்கான மக்கள், போதுமான பேருந்து வசதிகள் இன்றி பேருந்து நிலையங்களிலேயே மணிக்கணக்காகக் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
— TVK Party HQ (@TVKPartyHQ) April 23, 2026
இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கு உடனடியாகப் பேருந்து வசதிகளைச் செய்து தர வேண்டும். போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தொகுதிகளிலும், இன்று இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும்” என அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளார். மக்களின் ஜனநாயகக் கடமையை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ள இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
