மும்பை: பிள்ளைகளின் பிறந்தநாளைக் கொண்டாடப் பெற்றோர்கள் பார்த்துப் பார்த்து கேக் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், அப்படி வாங்கிய ஒரு பர்த்டே கேக் 3 வயதுக் குழந்தையின் உயிரையே பறிக்கும் நிலைக்குச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாய் ஒருவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், தனது மகனின் பிறந்தநாளுக்காக ‘பவுலிங் தீம்’ (Bowling Theme) கொண்ட அழகான கேக் ஒன்றை ஆர்டர் செய்ததாகக் கூறியுள்ளார். அந்த கேக்கை அலங்கரிப்பதற்காக அதன் உள்ளே இரும்பு கம்பிகள் (Metal Wires) பயன்படுத்தப்பட்ட விவரத்தை பேக்கரி ஊழியர்கள் தங்களுக்குச் சொல்லவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த 3 வயதுக் குழந்தை கேக்கிற்குள் இருந்த கூர்மையான இரும்பு கம்பியை யாருக்கும் தெரியாமல் விழுங்கியுள்ளது. பதறிப்போன பெற்றோர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்-ரே (X-Ray) எடுத்துப் பார்த்துள்ளனர். அதில் குழந்தையின் வயிற்றில் இரண்டு இரும்பு துண்டுகள் இருப்பது கண்டு டாக்டர்களே அதிர்ந்தனர்.
நல்லவேளையாக, எந்தவித அறுவை சிகிச்சையும் இல்லாமல் 48 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த இரும்பு கம்பிகள் இயற்கையான முறையில் வெளியேறின. “கேக் வாங்கும் போது அதில் இருக்கும் அலங்காரப் பொருட்கள் சாப்பிடக்கூடியவையா (Edible) என்பதைப் பெற்றோர்கள் கண்டிப்பாகச் சரிபார்க்க வேண்டும்” என அந்த தாய் உருக்கமாக எச்சரித்துள்ளார்.
