வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் பெர்னார்ட் ஜூலியன் (வயது 75) உடல் நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது. 1973 முதல் 1977 வரை சர்வதேச கிரிக்கெட்டில் பயணித்த ஜூலியன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்களைத் தொகுத்து 866 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 86 ரன்களும், 18 விக்கெட்டுகளும் பெற்றுள்ளார்.

1975-ம் ஆண்டு நடந்த முதலாவது ஒருநாள் உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரில்: இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்ததோடு நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதன் மூலம் அந்நேரத்தில் அணியின் முக்கியமான ஆல்-ரவுண்டராக ஜொலித்தார். அதே நேரத்தில், கவுண்டி கிரிக்கெட்டிலும் கென்ட் அணிக்காக பங்கேற்றுள்ளார். 1982-83-ம் ஆண்டுகளில், இனவெறி கொள்கை காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்த ‘ரெபல்’ வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றதாலேயே அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முன்பை விட விரைவில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது மறைவுக்கு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.