ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அண்மையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் யாராக இருந்தாலும் அவர் இஸ்ரேலின் இலக்காக இருப்பார் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஈரானின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ‘நிபுணர்கள் அவை’ கூடும் இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதோடு, இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் அல்லது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு தலைவரும் தப்ப முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த மிரட்டலுக்கு மத்தியில், மறைந்த காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி அடுத்த உச்ச தலைவராக ரகசியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஆதரவுடன் இந்த நியமனம் நடந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இஸ்ரேல் தனது ‘ஆபரேஷன் லயன்ஸ் ரோர் என்ற திட்டத்தின் கீழ் அடுத்தடுத்த இலக்குகளைத் தீர்மானித்து வருகிறது. மத்திய கிழக்கில் நிலவும் இந்தப் போர்ச் சூழல், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலை ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.