சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் எஸ் ஐ ஆக பணிபுரிந்து வந்தவர் பிரணிதா. அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு அவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு ஸ்டேஷனுக்கு ஆவணங்கள் எடுத்து வர சென்றுள்ளார். அப்போது விசிக மாவட்ட செயலாளர் இளைய கௌதமன் உட்பட 10 பேர் கோவில் நிலம் தொடர்பாக அங்கு சென்று பிரணிதாவிடம் தகராறு செய்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை அதிமுக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சிவகங்கை மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த மு.க.ஸ்டாலினின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். குழந்தைகளுக்கு பள்ளியில் பாதுகாப்பில்லை! பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பில்லை! மூதாட்டிகளுக்கு வசிக்கும் இடங்களில் பாதுகாப்பில்லை! காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை! இதுதான் மு.க.ஸ்டாலினின் மாடல் ஆட்சி! பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.