திமுக கட்சியின் மூத்த அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் வடநாட்டினவர்கள் குறித்து பேசியது சர்ச்சையாக மாறியது. அதாவது மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் திமுக எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என்று கூறிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் துரைமுருகன் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது தான் தமிழனின் நாகரிகம். ஆனால் ஐந்து அல்லது பத்து ஆண்களுக்கு ஒருத்தி என்பது தான் வடநாட்டினவர் நாகரிகம். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வந்து விடுவான். அப்படிப்பட்ட நாற்றமெடுத்த நாகரிகம் தான் அவர்களுடையது என்று கூறினார்.

இது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் தற்போது இதற்கு பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த கண்டன பதிவில் அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோவையும் இணைத்து ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,

அதிர்ச்சியளிக்கிறது & அவமானகரமானது! மூத்த திமுக அமைச்சர், துரைமுருகன் பெண் வெறுப்பின் மிகக் குறைந்த ஆழத்திற்குச் சென்று, பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் ஒரு கீழ்த்தரமான, இழிவான கருத்தைத் தெரிவித்துள்ளார். “ஐந்து ஆண்கள் ஒரு பெண்ணை மணப்பார்கள்” என்ற அவரது அருவருப்பான கூற்று நமது இந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், பெண்கள் மீதான திமுகவின் ஆழமாக வேரூன்றிய அவமதிப்பையும் அம்பலப்படுத்துகிறது. மேலும் அறிவாலயம் இதற்கு பதில் சொல்லுமா? கைதட்டல் மற்றும் சிரிப்புடன் வேடிக்கை பார்க்கிறது .தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் மற்றும் எம்.பி. திருமதி. கனிமொழி இந்த அருவருப்பான சொல்லாட்சியை நியாயப்படுத்துவீர்களா?

இந்தியா கூட்டணித் தலைவர்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, ஹேமந்த் சோரன் ஆகியோர் பெண்களை இப்படி வெளிப்படையாக அவதூறாகப் பேசுவதைக் கண்டிக்கத் துணிவீர்களா, அல்லது தங்கள் கூட்டாளியின் அவமானகரமான நடத்தையைக் காப்பாற்ற அவர்கள் அமைதியாக இருப்பார்களா? இது திமுகவின் வழக்கமான வெறுப்பு அரசியல் மட்டுமல்ல; இது ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் கண்ணியத்தின் மீதான தாக்குதல். இந்த நாட்டின் பெண்கள் சார்பாக, பாஜக மகளிர் அணி சார்பில் இந்த வெட்கமற்ற பெண் வெறுப்பு வெளிப்பாட்டிற்கு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோருகிறது என்று பதிவிட்டுள்ளார்.