இந்திய கிரிக்கெட் உலகில் தனது 15 வயதிலேயே ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இளம் இடதுகை பேட்ஸ்மேன் வைபவ். ஐபிஎல் மற்றும் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் மிரட்டிய இவரின் சர்வதேச அரங்கேற்றத்திற்காக உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது. அயர்லாந்துக்கு எதிரான தொடரிலேயே வைபவ் இந்திய அணியில் புயல கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஜோடி அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், முதல் போட்டிக்கான ப்ளேயிங்-11 இல் இடம் கிடைக்காமல் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ-க்கு எதிராக கோஷமிட்டு வரும் நிலையில், போட்டிக்கு முன்பாக வைபவ் தனது அதிகாரப்பூர்வ கணக்கில், ஒரு மணல் கடிகார எமோஜியுடன் “Grateful” என்று பதிவிட்ட ஒரே ஒரு வார்த்தை தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
Grateful 🙏🇮🇳 ⏳ pic.twitter.com/YkVdNAl74s
— Vaibhav Sooryavanshi (@Vaibhavsooryava) June 30, 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு முக்கிய காரணம், தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கான கடுமையான போட்டிதான் என்று கூறப்படுகிறது. தற்போது அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி, இடது மற்றும் வலது கை பேட்டிங் காம்பினேஷனை அணிக்கு வழங்குகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றியவர்கள் என்பதால், அவர்களை நீக்குவது நியாயமில்லை என்று கம்பீர் தரப்பு வாதிட்டது.
ஆனால், தற்போது அந்த வாதம் செல்லுபடியாகாமல் போயுள்ளது. காரணம், சீனியர் வீரரான சஞ்சு சாம்சன் கடந்த 3 போட்டிகளில் 5, 0, 1 என வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஃபார்மில் உள்ளார். சஞ்சுவின் சொதப்பலால் அயர்லாந்து தொடரை இந்தியா 2-0 என இழந்தது மட்டுமின்றி, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் 7 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டாகி இந்திய அணியை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளார். இதனால், வரவிருக்கும் 2வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
