இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ஒரு இன்னிங்ஸோடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களம் இறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரைக் குவித்தது.

இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போதே மழையின் தூறல் இருந்தது. எனினும், முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு மழை விஸ்வரூபம் எடுத்ததால், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களம் இறங்குவதற்கு முன்பாகவே போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இந்திய அணியின் பலத்த போராட்டம் மழையால் அடித்துச் செல்லப்பட்டது.

இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை சொதப்பி ஆட்டமிழக்க, உலக டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்து மாஸ் காட்டிய இஷான் கிஷன், தனது சொந்த அழைப்பால்  தேவையின்றி ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

அயர்லாந்து தொடரிலும் இதேபோல் ரன் அவுட்டான இஷான், இப்போட்டியிலும் ரன் அவுட்டானதால் அதிருப்தியடைந்த அபிஷேக் சர்மா, மைதானத்திலேயே அவரிடம் சென்று காரசாரமாக விவாதித்தார். “கிரிஸை அடைந்துவிட்டாயா இல்லையா?” என்று அபிஷேக் கேட்க, “எனக்குத் தெரியவில்லை, மிக நெருக்கமாக  உள்ளது” என்று இஷான் பதிலளித்தார். உடனே அபிஷேக், “என்ன பண்றீங்க இஷான் நீங்க?” என்று கேட்க, இஷான் தனது தவறை ஒப்புக்கொண்டு, “பந்து முன்னாடியே நின்றுவிடும் என்று நினைத்தேன், அது என்னுடைய கால் தான்” என்றார்.

அதற்கு அபிஷேக், “ஆனால் ஃபீல்டர் எங்கு நிற்கிறார் என்று பார்க்க வேண்டாமா?” என்று சாடினார். இந்த ஆரம்ப விக்கெட் சரிவுக்குப் பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா (59 ரன்கள், 24 பந்துகள்) மற்றும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (68 ரன்கள், 47 பந்துகள்) ஜோடி 38 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அணியை மீட்டனர். இறுதி கட்டத்தில் சிவம் துபே 21 பந்துகளில் அதிரடியாக 42 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.