தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், புத்தாண்டு தினமான வியாழக்கிழமை நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இவர்கள், சர்வதேச கடல் எல்லைத் தாண்டியதாகக் கூறி கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த டிசம்பர் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 11 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது தமிழக கடலோரப் பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களைக் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வரும் இலங்கை அதிகாரிகள், அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
