ரயில் பயணிகள் ‘ரயில் ஒன்’ (Rail ONE) செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே நிர்வாகம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதுவரை, ரயில் ஒன் செயலியில் உள்ள ‘ரயில்வே வாலட்’ (Railway Wallet) மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே 3 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. பிற டிஜிட்டல் முறைகளான (UPI, Credit/Debit Card, Net Banking) மூலம் பணம் செலுத்தும்போது இந்தச் சலுகை வழங்கப்படவில்லை.

தற்போது, பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, எந்த வகையான டிஜிட்டல் பேமெண்ட் தளத்தைப் பயன்படுத்தினாலும் இனி 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் இந்தச் சலுகை, கீழ்க்கண்ட கால இடைவெளியில் நடைமுறையில் இருக்கும்:

அதன்படி  14.01.2025 பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் தொடங்கி  14.07.2026 வரை அமலில் இருக்கும். ரயில்வே வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 3 சதவீத தள்ளுபடி வழக்கம் போல் தொடரும்.  இந்த 3 சதவீத கட்டணச் சலுகை ‘ரயில் ஒன்’ செயலி மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற இணையதளங்களிலோ அல்லது தளங்களிலோ டிக்கெட் முன்பதிவு செய்தால் இந்தச் சலுகை கிடைக்காது.

மேலும் ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களில் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.