ஆங்கில இலக்கியத்தில் பி.எச்.டி.  மற்றும் பல்வேறு முதுகலைப் பட்டங்களை முடித்திருந்தும், குடும்ப வறுமையின் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பகுதிநேரமாக டாக்ஸி ஓட்டி வரும் அவலநிலை சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர் இ. திருமலை ராஜா, மாதத்திற்கு ரூ. 30,000 மட்டுமே ஊதியமாகப் பெறுகிறார்.

கல்வித் தகுதியும், பல ஆண்டுகால கற்பித்தல் அனுபவமும், பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட பெருமையும் இருந்தும், நிலையான பணி கிடைக்காதது அவரது வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது.

வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் அவர், கல்லூரி நேரத்திற்குப் பிறகு தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடி வருகிறார்.

இந்த உருக்கமான தகவலை இந்திய ரயில்வே கணக்கு சேவையின்  மூத்த அதிகாரி அனந்த் ரூபனகுடி தனது எக்ஸ்  தளத்தில் பகிர்ந்துகொண்டதுடன், அவருக்கு ஒரு நிரந்தர ஆசிரியர் பணி கிடைக்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர் கல்வி கற்றும், தகுதியான பணி கிடைக்காமல் ஒரு பேராசிரியர் டாக்ஸி ஓட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, கல்வித் துறையின் தற்போதைய சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இவருடைய இந்த தியாகமும் போராட்டமும் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இவருக்குப் பொருத்தமான பணி கிடைக்க வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.