கர்நாடக மாநிலம் துமகூருவில் தாயின் அலட்சியத்தால் ஒரு நாள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 28-ம் தேதி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த 40 வயது பெண்மணி, அடுத்த நாளே தனது மூத்த மகளின் நிச்சயதார்த்த விழா இருந்ததால், பிறந்த குழந்தையை அரவணைக்க வேண்டிய தருணத்தில் அதனை தனது சகோதரி வீட்டில் விட்டுவிட்டு விழா கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளார்.

தாய்ப்பால் மற்றும் போதிய பராமரிப்பின்றி குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து, உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அந்தப் பிஞ்சு உயிர் பிரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு அளித்த புகாரின் பேரில், மகளிர் போலீசார் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.