பீகார் மாநிலம் பாலகாட் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ஷா என்பவரின் மனைவி பூலோ தேவி (31). இவருக்கு நீண்ட நாட்களாக ஆண் வாரிசு இல்லாததால், கணவர் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் சேர்ந்து பூலோ தேவியை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் மாயமான பூலோ தேவியை தேடி வந்த அவரது சகோதரர் சிவநாத் ஷா, இது குறித்து கடந்த 25-ம் தேதியே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் அலட்சியம் காட்டியதாகத் தெரிகிறது.

இதனிடையே, நேற்று புதன்கிழமை ஆசிரம்காட் அருகே புத்தி கண்டக் ஆற்றின் கரையோரம் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் எப்.எஸ்.எல் குழுவினர் சாக்கை பிரித்துப் பார்த்தபோது, அதில் அழுகிய நிலையில் பூலோ தேவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் தனது சகோதரியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது தலைமறைவாகியுள்ள கணவர் சந்தோஷ் மற்றும் அவரது சகோதரர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.