தமிழகத் தேர்தல் என்றாலே போஸ்டர் வாசம் வீசுவதை விட, அண்டா அண்டாவாக வேகும் பிரியாணி வாசம்தான் ஊர் எங்கும் அதிகமாக வீசுகிறது. சுவர் விளம்பரம், மைக் செட் எனப் பல தொழிலாளர்களுக்கு இது வருமானம் தரும் காலம் என்றாலும், தொண்டர்களைக் கட்டிப்போடும் மந்திர சக்தியாக இன்று பிரியாணி உருவெடுத்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் 2026 தேர்தலில், ஒரு தொகுதிக்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்க வேண்டியிருப்பதால், ஆடு மற்றும் கோழி இறைச்சியின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரே அண்டாவில் சமைத்து முட்டையுடன் பார்சல் செய்வது விநியோகத்திற்கு எளிது என்பதால், புளியோதரை போன்ற உணவுகளை ஓரம் தள்ளிவிட்டுபிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தத் தேர்தல் பிரியாணி ஒரு மிகப்பெரிய சங்கிலித் தொடர் பொருளாதாரத்தையே உருவாக்குகிறது. அரிசி ஆலைகள், மசாலா வியாபாரிகள் முதல் வாழை இலை மற்றும் பேப்பர் பாக்ஸ் தயாரிப்பாளர்கள் வரை அனைவருக்கும் இது ஜாக்பாட் அடிக்கும் காலமாக மாறியுள்ளது.

பிரியாணியின் தரத்தை வைத்தே “கவனிப்பு” சரியாக இருந்ததா என்று தொண்டர்கள் முடிவு செய்வதால், வேட்பாளர்கள் தரம் குறைந்த உணவைத் தருவதில்லை. இதற்காகப் பிரத்யேக ‘டோக்கன்’ முறையும் அமலில் உள்ளது.

அரசியல் கட்சிகளின் சின்னங்கள் எதுவாக இருந்தாலும், தொண்டர்களின் பார்வையில் அது ஒரு ‘பிரியாணி’ சின்னமாகவே தெரிகிறது. தேர்தல் களம் அரசியல் சூட்டை விட, பிரியாணி அண்டாவின் சூட்டில் அனல் பறக்கப் போவது உறுதி.